வாரார் கருப்பசாமி
கருப்பர் வாரார் கருப்பர் வாரார் கருப்புசாமி
கார்மேக வண்ணன் வாரார் கருப்புசாமி
தட்டட்டி பேரழகன் தாவி வருகிறார்.
வெட்டறிவாள் மீசை ஆட விரைந்து வருகிறார்
கட்டுச்சோற்றுக் கருப்பையா காக்க வருகிறார்
கொட்டுமேளம் முழங்கிடவே குதித்து வருகிறார்
ஜவ்வாது சாம்பிராணி கம கமக்க
சந்தனமும் பன்னீரும் கம கமக்க
நீலப்பட்டு பளபளக்க நிமிர்ந்து வருகிறார்
கோலப்பொட்டு ஜொலி ஜொலிக்க கூவி வருகிறார்
பட்டயங்கொலுசோடு பாடி வருகிறார்
கட்டியங்கள் கூறிக்கொண்டு காக்க வருகிறார்
சுக்குமாந் தடியேந்தி ஜோராய் வருகிறார்
மக்கள் குறை தீர்த்திடவே மகிழ்வாய் வருகிறார்
வட்டப் பிசாசினத்தை துடைக்க வருகிறார்
கெட்ட கனாக்களையும் கெடுக்க வருகிறார்
தொட்டிலாடும் பிள்ளைக்கு துணையாய் வருகிறார்
தீட்டியோடு சூனியத்தை தீர்க்க வருகிறார்
ஜல்ஜல்லென மணிமுழங்க சாட்டை எடுப்பார்
நில்நில்லென தீயவரை நிமிர்த்துக் கட்டுவார்
பதினெட்டாம் படியேறும் கருப்புசாமி
சதிகார கூட்டத்துக்கு நெருப்புச்சாமி
பாச்சோறும் பணியாரமும் பள்ளயம்போடு
பாதகத்தை விலக்கிடவே பாதத்தை நாடு
எங்கள் பாடலுக்கு விரைந்திட வேண்டும்
தீரமுடன் எம்மனதில் உறைந்திட வேண்டும்.