உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

திருச்சி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

திருச்சி: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று, சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் நகரிலுள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்தனர். வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாலை அணிந்து, பாத யாத்திரையாக வந்து, நேற்று முன்தினம், 16ம் தேதி முதலே கோவிலில் குவிந்தனர். ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. அது போல, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன் கோவில், சாலை ரோடு மாரியம்மன் கோவில், பாலக்கரை, தில்லைநகர், கே.கே.நகர், தெப்பக்குளம், திருவானைக்காவல் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சக்கரத்தழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கும், ரங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர் பெருமாளுக்கு நேற்று, ஜோஷ்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 7 மணிக்கு, கொள்ளிடம் ஆற்றிலிருந்து யானை மீது வைத்து வெள்ளிக்குடங்களில் திருமஞ்சனம் எடுத்து வந்து, காலை, 10 மணிக்கு சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் சன்னதிகளில் ஜோஷ்டாபிஷேகம் நடந்தது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுத்து வந்த திருமஞ்சனத்தால் சிங்கர் பெருமாளின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சுத்தம் செய்யும் பணி நடந்தது. பின், மங்களஹாரத்தியும், திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை வைவேத்தியம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !