10 ஆயிரம் கோவில்களுக்கு பூஜை அரசு வழங்குகிறது உபகரணம்!
சென்னை: சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவங்கி வைக்கிறார்.சிறுகோவில்களில், ஒருகால பூஜையேனும் நடத்தப்பட வேண்டும் என, 1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார். 1993ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மக்கள் பங்கு, 2,500 ரூபாய் அரசு பங்கு, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் கோவில் பராமரிப்பு நிதி 1,300 ரூபாய், கோவில் நல நதியில் இருந்து 1,200 ரூபாய் என, ஒவ்வொரு கோவிலுக்கும், 25 ஆயிரம் ரூபாய் பராமரிப்புச் செலவாக வழங்கப்பட்டது. இந்த தொகை பின், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இப்போது, 11,931 கிராமப்புற கோவில்களில் பூஜை நடந்து வருகிறது.கிராமங்களில் உள்ள சிறு கோவில்களில், பூஜைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்றும், அரசே அவற்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, கிராமங்களில் உள்ள, 10 ஆயிரம் சிறு கோவில்களுக்கு பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, அன்ன தொங்கு விளக்கு ஆகியவற்றை வழங்க அறநிலையத் துறைக்கு, அரசு உத்தரவிட்டது. கும்பகோணம் பூம்புகார் நிறுவனம் சார்பில் கோவில்களுக்கு வழங்க வேண்டிய பூஜை உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பொருட்களை எல்லா மாவட்டத்துக்கும் அனுப்பி வருகின்றனர். எல்லா ஊர்களுக்கும் சென்று சேர்ந்த பின், முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை துவங்கி வைக்கிறார்.