அன்னுார் கருப்பராயன் கோவில் 29ல் தேரோட்டம்
அன்னுார் : கருப்பராயன் கோவிலில் வரும், 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.அன்னுார் சிறுமுகை ரோடு, கைகாட்டியில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கருப்பராயருக்கு, 22 அடியிலும், விநாயகருக்கு, 11 அடியிலும் தேர் செய்யப்பட்டுள்ளது. வேங்கை மரத்தில், முன்புறம் குதிரைகள் மற்றும் சிறுதெய்வங்களுடன், 20 லட்சம் ரூபாய் செலவில் தேர் அமைக்கப்பட்டுள்ளது. தேர் வெள்ளோட்டம் கடந்த மாதம் நடந்தது. தேரோட்ட திருவிழா வரும், 27ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு வேள்வி பூஜை நடக்கிறது. 28ம் தேதி மாலையில் இரண்டாம் கால வேள்வி, அபிஷேக பூஜை, கரகம் எடுத்தல், அன்னதானம் வழங்குதல் நடக்கிறது.வரும், 29ம் தேதி புதன் காலை 7:00 மணிக்கு பால் அபிஷேகம், பொங்கல் வைத்தல், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 9:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். 10:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு, இசை நிகழ்ச்சி நடக்கிறது. மறுபூஜை 31ம் தேதி மதியம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.