உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூர்த்தி மலையில் ஆடித்திருவிழா : ஏற்பாடுகள் தீவிரம்

திருமூர்த்தி மலையில் ஆடித்திருவிழா : ஏற்பாடுகள் தீவிரம்

உடுமலை: உடுமலை திருமூர்த்திமலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆடிப்பெருந்திருவிழா நடத்த, ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடிப்பெருக்கு விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவையொட்டி, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலா துறை உட்பட அரசுத்துறைகளுடன் இணைந்து, ஆடிப்பெருந்திருவிழாவை நடத்தியது.இந்தாண்டு, விழா, வரும் ஆக., 2, 3 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விழாவையொட்டி, பல்வேறு பள்ளிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்காக, உடுமலை பகுதியிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து அரசு துறைகள் சார்பிலும், விழா நடக்கும் பகுதியில், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக முதற்கட்ட ஆலோசனை திருப்பூரில், நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று, விழா நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை, கோட்டாட்சியர் சாதனைக்குறள், தாசில்தார் சைபூதீன் ஆய்வு செய்தனர். திருமூர்த்தி அணை படகுத்துறை அருகே, விழா நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் கூறுகையில், ஆடிப்பெருந்திருவிழா மூலம் திருமூர்த்திமலையின் சுற்றுலா அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசுத்துறைகளின் அரங்குகள் மூலம் அங்கு வரும் மக்களுக்கு திட்டங்கள் குறித்த விளக்கமும் அளிக்கப்படுகிறது. நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்வாகவும், இந்த விழா அமைகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !