பரமக்குடி கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் ஆடிவெள்ளி சிறப்பாக நடந்தது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஜூலை 23 ல் ஆடி பிரம்மோற்சவ விழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பெருமாள் அன்னம், சிம்மம், சேஷ, கருட, அனுமன், யானை வாகனங்களில் வீதியுலா வருகிறார். நேற்று ஆடி 2 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் பாத யாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பக்தர்கள் கூழ் படைத்து, பக்தர்களுக்கு வழங்கினர். மூலவர் மற்றும் உற்சவருக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. பரமக்குடி வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பறவை காவடி, மயில் காவடி, பால்குடம் ஏந்தி வந்தனர். காளி அலங்காரத்துடன் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதே போல் அனைத்து கோயில்களிலம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.