பழநியில் டோல்கேட் கட்டணம் கூடுதல் வசூல் : பக்தர்கள் எதிர்ப்பு
பழநி: பழநி நகராட்சி நுழைவுவரிகட்டணம் கூடுதலாக வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர். பழநி நகராட்சி சுற்றுலா வாகன நுழைவுவரி வசூல் ("டோல்கேட்) பஸ் ரூ.100, லாரி ரூ.80, வேன் ரூ.75, கார் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் குத்தகைதாரர்களால் ஆண்டவர் பூங்காரோடு, இடும்பன் கோயில், அடிவராம், தெற்குகிரிவீதி, கொடைக்கானல் பிரிவு பகுதிகளில் நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஈரோடுமாவட்டம் வளையங்குளத்தை சேர்ந்த பக்தர்கள் இரண்டு மினிலாரியில் பழநிகோயிலுக்கு வந்தனர். அவர்களிடம் ஒருவாகனத்திற்கு ரூ.100ம் மற்றொரு வாகனத்திற்கு ரூ.50 நுழைவுக்கட்டணம் வசூலித்ததனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அறிந்த அவர்கள் ஆண்டவர்பூங்கா ரோட்டில் டோல்கேட் வசூல் செய்வோருடன் வாக்குவாதம் செய்தனர். வசூலிப்பாளர்கள் கூறுகையில், ""வேறு இடத்தில் பஸ்சுக்காக பெற்ற ரூ.100 ரசீதை காட்டி வாக்குவாதம் செய்கின்றனர் என்றனர்.
பக்தர் ஜீவா கூறுகையில்,""ஈரோட்டிலிருந்து பாதயாத்திரையாக பழநிகோயிலுக்கு 50க்கு மேற்பட்டவர்கள் வந்தோம் எங்களது சமையல் பாத்திரங்களை ஏற்றிவந்த மினிலாரிக்கு கட்டணமாக ஒருஇடத்தில் ரூ.50ம் மறுஇடத்தில் ரூ.100 கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டணவிபர அறிவிப்பு பலகையை கண்ணுக்கு தெரியாதபடி மறைத்துவைத்துள்ளனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார். பழநி நகராட்சி தலைவர் வேலுமணி கூறுகையில்,""கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.