மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
திருத்தணி:மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில், முருகன் கோவிலின் உபகோவிலான, மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த திரளான பெண்கள், கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 3:00 மணி முதல், 4:30 மணி வரை, ராகுகால பூஜை நடந்தது. அதேபோல், திருத்தணி நகரத்தில் உள்ள, அம்மன் கோவில்களில், ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.