பாகம்பிரியாள் கோயிலில் பக்தர்கள்: தங்குவதற்கு இடவசதியின்றி தவிப்பு
திருவாடானை:திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் தங்குவதற்கு வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பரிதவிக்கின்றனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் விசேஷ பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். அதிகாலையில் சுவாமியை வணங்குவது சிறப்பு என்பதால், ஏராளமான பக்தர்கள் முதல் நாள் இரவே சென்று கோயிலில் தங்கி விடுவார்கள். அவர்கள் தங்குவதற்கு மண்டபம் இருந்த போதும், இடநெருக்கடியால் திறந்த வெளியிலும் ரோடு ஓரங்களிலும் பக்தர்கள் படுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு திருடர்கள் தொல்லை உண்டு. கோயிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. தற்காலிக கடைகள் அதிகரித்து வருவதால் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்த வசதியில்லை. பஸ்ஸ்டாண்டு இல்லாததால், பஸ்களை தெருவில் நிறுத்தி திருப்ப செல்ல வேண்டியுள்ளது. பஸ்களை திருப்பும் போது விபத்து ஏற்படுகிறது. டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னைகள் உருவாகிறது. மேலும், கழிப்பறைகள் இல்லாததால் பக்தர்கள் அருகிலிலுள்ள கண்மாயை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆடி கடைசி வெள்ளியன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து பல ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். திருவாடானையிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். பக்தர்கள் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றியும், கூடுதலாக மண்டபம் கட்டவும் தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.