பால்ராம்பட்டு கிராமத்தில் அம்மன் கோவில் தேரோட்டம்
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து இரவு போர் மன்னன் சுவாமி வீதியுலா மற்றும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திரவுபதி அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் காலை அர்ச்சுணன் தவசு நிகழ்ச்சியை தொடர்ந்து, முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், அர்ச்சுணன் மாடு திருப்புதல் மற்றும் பீமன் கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். சுற்றுபுற கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., மதிவாணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சந்திரசேகர், சப்இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.