பொங்களாயி அம்மன் கோவில் விழா:ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு!
ராசிபுரம்: ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவில், 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில், பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஸ்வாமி கற்சிலை வடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், கடந்த, 200 ஆண்டுகளாக "ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழாவுக்காக, கடந்த, 29ம் தேதி, கொங்கலம்மன் ஸ்வாமிக்கு பூச்சாட்டு விழா நடந்தது. தொடர்ந்து, தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 10 மணிக்கு பொங்கல் விழா துவங்கியது. விழாவை தொடர்ந்து, இண்டங்காடு கருப்பு ஸ்வாமிக்கு முப்பூஜையும், விநாயகர் ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. மேலும், பொங்களாயி அம்மன் ஸ்வாமிக்கு படையல் மற்றும் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண் பக்தர்கள், 87 கிடாவெட்டி ஸ்வாமிக்கு பலியிட்டனர். அவ்வாறு பலியிட்ட ஆடுகளை வெட்டி நறுக்கி அங்கேயே சமைத்து, நேற்று அதிகாலை அனைவருக்கும் சமபந்தி வழங்கினர். நிகழ்ச்சியில், 2,000க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.