சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா: பக்தர்களுக்கு அனுமதி!
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவிற்காக நாளை( ஆக.,8) முதல் 18 வரை 11 நாட்களுக்கு பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடைகாரணமாக கடந்த 3 மாதமாக மலைக்கு செல்லமுடியாமல் தவித்த பக்தர்களுக்காக இந்த ஆண்டு விழாவில் ஆக.,9 முதல் பத்து நாட்கள் அமாவாசை விழாபோல் சிறப்பு வழிபாட்டிற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.இங்கு நடைபெறும் ஆடி அமாவாசை விழாவிற்காக தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான சிவபக்தர்கள், சாதுக்கள் வருவர். இந்த விழா வரும் ஆக.,12 ல் துவங்குகிறது. கடந்த மே 17 ல் மலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிரிழப்பு பின் பக்தர்கள் மலைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது.
மலை திறக்கப்பட்டால் அமாவாசை தினத்தன்று கூடும் நெரிசல் ஏற்படும். அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்ப்பதற்காக வழக்கமாக 3 நாட்கள் நடக்கும் ஆடி அமாவாசை வழிபாட்டை இந்த ஆண்டு 10 நாட்களும் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமாவாசை வெள்ளி அன்று வருவதால் மறுநாள் சனி, ஞாயிறு விடுமுறைநாள். இதை கணக்கிட்டு ஏராளமான பக்தர்கள் அமாவாசை பின் மறுநாட்களில் மலைக்கு வருவர். அப்படி வரும் பக்தர்களுக்கும் அமாவாசை தரிசனம் கிடைக்க அமாவாசை வழிபாட்டைப் போல் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட உள்ளது.கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி கூறுகையில்,"நாளை( ஆக.,8) முதல் 18 வரை பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக கோயிலுக்கு வரமுடியாததால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். ஏக்கத்தில் உள்ள பக்தர்கள் ஒரேநாளில் மலையில் குவிந்து விட்டால் தரிசனத்திற்கே பக்தர்கள் பலமணிநேரம் காத்திருக்க நேரிடும். கூட்டத்தை பரவலாக்கி அனைவருக்கும் போதுமான தரிசனம் கிடைக்க இந்தாண்டு சிறப்பு ஏற்பாடாக ஆக.,9 முதல் 10நாள் வழிபாடுக்கு ஏற்பாடு செய்து உள்ளோம்,”என்றார்.ஆய்வு: விழா ஏற்பாடு குறித்து நேற்று கலெக்டர்கள் சுப்பிரமணியன் (மதுரை) ராஜாராமன் (விருதுநகர்) எஸ்.பி., மகேஷ்வரன், அதிகாரிகள் தாணிப்பாறை, வண்டிப்பண்ணையில் ஆய்வு செய்தனர். மருத்துவ முகாம் அமையும் இடங்களை பார்வையிட்டனர். வாகனங்களை அடிவாரத்தில் ஒரு கி.மீ., அப்பால் நிறுத்த உத்தரவிட்டனர்.