திருமலையில் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு!
திருப்பதி:திருமலையில், ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம் என்ற, கோவில் முழுவதையும் தங்கமயமாக்கும் திட்டம் கைவிடப்படுகிறது, என, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:திருமலையில், ஏழுமலையான் குடி கொண்டிருக்கும் கோவில் முழுவதையும் தங்கமயமாக்க, ஐந்து ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு முடிவு செய்தார். அதற்கு, ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம் திட்டம் என, பெயர் சூட்டினார். அந்தத் திட்டத்திற்கு பலர் பணம், தங்கம் என, நன்கொடை வழங்கினர். கோவில் முழுவதையும் தங்க மயம் ஆக்கினால், சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் அழிந்து விடும் என, சில ஆன்மிகவாதிகள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இத்திட்டத்திற்காக, 192 கிலோ தங்கம்; 13 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டிருந்தது. அதை, தேவஸ்தானம், வங்கியில் டிபாசிட் செய்துள்ளது. அந்த தங்கம் மற்றும் பணத்தை, நன்கொடை வழங்கியவர்களிடம், திரும்ப ஒப்படைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.ஆனால், யாரும் பணத்தை திரும்ப பெற முன்வரவில்லை. சிலர், தேவஸ்தானத்தின் பிற அறக்கட்டளைக்கு, பணத்தை மாற்ற முடிவு செய்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.