தேவிபட்டினம் நவபாஷண கடற்கரை: கேமரா மூலம் போலீஸ் கண்காணிப்பு!
தேவிபட்டினம்:தேவிபட்டினம் நவபாஷணத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த சம்மந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். தேவிபட்டினம் கடலுக்குள் நவபாஷணம் அமைந்துள்ளதால் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. நவகிரக தோஷம், தர்பணம், திருமண தடை, ஏவல் உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜை செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆடி, தை அமாவாசை நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் குவிகின்றனர். கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது, பரிகார பூஜைகள் செய்தாக கூறி பக்தர்களிடம் கூடுதல் பணம் பறிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. எனவே பக்தர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் நவகிரகம் அமைந்துள்ள தேவிபட்டினம் கடற்கரையை கேமரா மூலம் போலீசார் கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.