கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :3712 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அய்தர்பட்டரை தெரு கன்னியம்மன் கோவில் ஆடி திருவிழாவில், நேற்று, தீமிதி திருவிழா நடைபெற்றது.சின்ன காஞ்சிபுரம், அய்தர்பட்டரை தெருவில், கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, கடந்த திங்கள்கிழமை, ரயில்வே சாலையில் உள்ள, பரஞ்சோதி அம்மன் கோவிலில், பொங்கலிட்டு பக்தர்கள் காப்புக் கட்டினர். அங்கிருந்து பொங்கல் ஊர்வலமாக கொண்டு வந்து, கன்னியம்மன் கோவில் சுவாமிக்கு படைத்தனர்.நேற்று மாலை 6:00 மணிக்கு, திருக்காலிமேடு சின்ன வேப்பம்குளம் பகுதியில் இருந்து, அக்னி சட்டி எடுத்து வந்தனர். பின், கோவில் அருகில் தீமிதி விழா நடைபெற்றது. இரவு அம்மன் மலர் அலங்காரத்தில் அய்தர்பட்டரை தெரு, பொய்யாகுளம் தெரு, காந்தி சாலை, ரெட்டிபேட்டை பகுதிகள் வழியாக, உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.