திருமலை ஆனி வார ஆஸ்தானம்: தமிழக பக்தர்கள் சுவாமி தரிசனம்
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆனி வார ஆஸ்தான நிகழ்ச்சி நடந்தது. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். தட்சிணாயண காலம் தொடங்குவதையொட்டி, ஆண்டுதோறும் திருமலை கோவிலில் ஆடி மாதம் முதல் நாள் அன்று, ஆனி வார ஆஸ்தான வைபவம் ஐதீக முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வைபவத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை ஒட்டி, நித்ய ஆர்ஜித சேவைகளான தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. வழக்கம்போல், வார விடுமுறையையொட்டி, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், தங்கும் விடுதி கிடைக்காதவர்கள், சாலை ஓரங்களில் ஓய்வெடுத்து வருகின்றனர்.