இடைப்பாடி கோவில்களில் நீண்டநேரம் காத்திருந்து தீ மிதித்த பக்தர்கள்
இடைப்பாடி: இடைப்பாடி பகுதிகளில் நடந்த மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் நடந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். இடைப்பாடியில் உள்ள மேட்டுத்தெரு, க.புதூர், ஆலச்சம்பாளையம், வெள்ளாண்டிவலசு பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களின் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கி, ஒரு வாரமாக நடந்து வந்தது. மேட்டுத்தெரு மாரியம்மன், க.புதூர் காளியம்மன் ஸ்வாமிகளின் கல்யாண உற்சவம் கடந்த 12ம் தேதி நள்ளிரவு நடந்தது. நேற்று காலை, நடந்த தீ மிதிக்கும் திருவிழாவில், ஸ்ரீபருவராஜகுல உறவினர் முறையாரின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள, மேட்டுத்தெரு மாரியம்மன் கோவிலில், 6,000க்கும் மேற்பட்ட பக்தர்களும், க.புதூர் காளியம்மன் கோவிலில் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் தீ மிதித்தனர். தீமிதி விழாவில், ஆம்னிவேளை இழுத்து வருதல், இளநீர் காய்களை முதுகில் கட்டி அலகு குத்தி இழுத்து வருதல், உரல் போன்றவைகளை இழுத்து வந்தும் தீ மிதித்தனர். ஏராளமான பெண் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடனும் தீ மிதித்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.