உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருநாத ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா: குவிந்த மக்கள்!

குருநாத ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா: குவிந்த மக்கள்!

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தில் குருநாத ஸ்வாமி கோவில், ஆடி தேர்த்திருவிழாவை முன்னிட்டு, குதிரை மற்றும் மாடுகள் சந்தை, நேற்று இரண்டாவது நாளாக கோலாகலமாக நடந்தது. அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குதிரை மற்றும் மாட்டுச்சந்தைகள், நேற்று முன்தினம் துவங்கியது. தவிர, கடந்த, 12ம் தேதி காலை, 10 மணி அளவில் மடப்பள்ளியில் இருந்து, 60 அடி மகமேரு தேரில் வனக்கோவிலுக்கு சென்ற குருநாத ஸ்வாமி அன்று முழுவதும் அங்கேயே இருந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று அதிகாலை மீண்டும் மேள, தாளங்கள் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில், காமாட்சி அம்மன், பெருமாள் ஸ்வாமி, குருநாத ஸ்வாமியும், புதுப்பாளையம் மண்டபக்கோவிலை வந்தடைந்தனர். வரும், சனிக்கிழமை வரை, மண்டபத் திருக்கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தினமும் மேளக்கச்சேரி, சங்கீத உபன்யாசங்கள் நடக்கும். விழாவின், இரண்டாவது நாளான நேற்றும், பல ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து, ஸ்வாமி தரிசனம் செய்தனர். பின், மாடு மற்றும் குதிரை சந்தைக்கு சென்று ரசித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான குதிரை, மாடு, ஆடு, கிளி போன்றவை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. வரும், 16ம் தேதி வரை இச்சந்தை களை கட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !