ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திருப்பணிகள் அமைச்சர் ஆய்வு
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், நேற்று ஆய்வு செய்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 235 அடி ராஜகோபுரம் உட்பட மொத்தம், 21 கோபுரங்கள் உள்ளது. கோவிலில் பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், ஆகிய சன்னதிகளும், 48 உபசன்னதிகளும் உள்ளன. கடந்த, 2001ம் ஆண்டு மார்ச் மாதம், இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின், 12 ஆண்டுகள் கடந்ததால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ராஜகோபுரம், சன்னதிகள் அனைத்தும் புனரமைத்து, வண்ணம் பூசும் பணிகள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி, கடந்த வாரம், 7ம் தேதி கோவிலுக்கு வந்து திருப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார். நேற்று காலை, 7.30 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து கோவிலில் நடைபெறும் திருப்பணிகளை ஆய்வு செய்தததுடன், அதிகாரிகள் மற்றும் திருப்பணி ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அமைச்சர் ஆய்வின் போது, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் ஜெயராமன் உடன் இருந்தார்.