கருப்பர் அருள் வேட்டல்
திருப்புத்தூர் நகர்வாழும்
தெய்வமே கருப்பய்யா
விருப்பமாய் உனைப்பணிந்தோம்!
வேண்டுதல் கேட்டருள்வாய்!
திருப்பங்கள் தந்திடுவாய்
செல்வங்கள் சேர்த்திடுவாய்
பெரியகருப் பண்ணசாமி
பிள்ளைகுரல் கேட்டுவருக!
கருப்பையா கருப்பையா
காலமெலாம் உன்பெயரை
விருப்பமாய்ச் சொல்லிவந்தோம்
விதியினால் வருதுன்பம்
அருளினால் நீ தீர்த்து
ஆளுவாய் கருப்பண்ணனே!
பெரியகருப் பண்ணனே
பிள்ளைகுரல் கேட்டுவருக!
குஞ்சுகள் உனைத்தேடி
கொண்டாட வரும் வேளை
இங்கேநீ வந்தருள்க
எங்கள்குரல் கேட்டுநீ
இன்னல்கள் தீர்த்துமே
எப்போதும் துணையாகுக
அன்போடு கருப்பண்ணன்
அருள்புரிய ஓடிவருக
வெட்டரிவாள் கொடுமீசை
விழியிலே தீப்பொறிகள்
குத்தீட்டித் தடிகளோடு
குஞ்சுகள் தனைக்காக்க
எத்திக்கில் அழைத்தாலும்
ஏறுமா பரியிலேறி
அத்திசை வரும்ஐயா
அருள்புரிய ஓடிவருக!
ராங்கியம் நகர்வாழும்
ஆங்காரக் கருப்பரும்
ஓங்குமுன் வாசல்தேடி
உயர்அருள் பெற்றிடவே
பாங்காக வருவரெனில்
பாரில் உன் புகழ்தன்னையே
ஈங்குயார் அறியார்கள்
எழுந்தோடி ஐயன்வருக
உன்வாசல் இடுகின்ற
உயர்சாம்பிராணியின்
வெண்மேகப் புகைஎழுந்து
விண்முட்டி வாசமே
அங்கேயும் வீசவே
அமரர்கள் அதிசயிப்பார்
எங்கெங்கும் பரவுபுகழ்
என்ஐயன் ஓடிவருக
வாவாநீ எனக்கூவி
வருந்திடும் அடியார்கள்
மாகாதல் கருப்பண்ணா
மனம்வாடச் செய்வதழகோ
போகாத வினைகூட
பொன்வாசல் உன்வாசல்
மாகாத தூரம்வரின்
மறையுமே ஓடிவருக!
ஐயாவென் றுனைக்கூவி
அழைத்திடும் அடியார்கள்
மெய்யாக உயரவைப்பாய்
மேலாக்கி வாழவைப்பாய்
கையாலே தொழுவோரைக்
கைகாட்டி உயர்த்திடும்
அய்யாளம் கருப்பண்ணனே
அருள்புரிய ஓடிவருக!
முத்துக் கருப்பரும்
சமயக் கருப்பரும்
மொய்த்திரு புறமிருக்க
முன்கோட்டைக் கருப்பரே
சங்கிலிக்கருப்பரோடு
சந்நிதி வீற்றருளும்
எங்கள்குல தெய்வமே
எமைக்காக்க ஓடிவருக!
கோட்டைக் கருப்பண்ணனே
கூப்பிட்ட குரல்கேட்டு
வேட்டைக்கு நீ விரைக
வேண்டாத பேர்வைத்த
ஓட்டைபில்லி சூனியம்
உயர்பாவை திட்டியெல்லாம்
சாட்டையாய் நீ ஓட்டி
ரட்சிக்க ஓடிவருக!
வீடுகளில் ஏற்றிடும்
விளக்கிலே ஒளியாக
மாடுமனை கன்றுகள்
மக்களைக் காக்கவருக
போடுபுகை சாம்பிராணிப்
புனித நறு வாசனே
பாடுதமிழ் கேட்டுவருக
பக்தரைக் காக்க வருக!