உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இராங்கியம் பெரிய கருப்பர் நவரத்தின மாலை

இராங்கியம் பெரிய கருப்பர் நவரத்தின மாலை

காப்பு

அவனியைக் காக்கும் தெய்வம்
அன்பர்க்கு உதவும் தெய்வம்
புவனம் பதினான் கினுமே
போற்றிடும் மாலின் அம்சம்
பவமிகு ராங்கியப் பதியின்
பெரிய கருப்பர் பேரில்
நவரத்ன மாலை பாட
நயமிகு களிறே காப்பு.

நூல்

வைரம்

வலக்கையில் சக்கரம் ஏந்தி
இடத்திலே சங்கம் தாங்கி
சலத்திலே பரம்பணை மீதில்
சயனமே கொண்ட மாலே
உலகெலாம் காக்க வேண்டி
உள்ளத்தில் வைரம் கொண்டு
நிலத்திலே பரிமேல் வருவாய்
கருப்பண்ண சுவாமி துரையே!

வயிடூரியம்

நெஞ்சிலே வஞ்சம் கொண்டு
நேரிலே அன்பைக்காட்டும்
வஞ்சகர் நடுங்கும் வண்ணம்
வயிடூரிய நூலிழை போல்
கொஞ்சிடும் சலங்கை கட்டி
குதிரையில் ஏறியே வருவாய்
அஞ்சன நிறுத்துப் பெரிய
கருப்பண்ண சுவாமி துரையே!

மரகதம்

மரகதப் பச்சை நிறமாய்
மங்கலச் செல்வி யோடு
அரவம்மேல் பள்ளி கொண்டு
அகிலமே காக்கும் தெய்வம்
துரகம்மேல் ஏறியே வந்து
துயரங்கள் போக்கி நல்ல
வரமது ஈவாய் பெரிய
கருப்பண்ண சுவாமி துரையே!

பவளம்

சூடிக் கொடுத்த அந்த
சுடர்க்கொடி ஆண்டாள் தானும்
பாடிக்களித்த நல்ல
பவளவாய்க் கண்ணன் தாள்கள்
தேடிப் பிடித்தோம் நாங்கள்
தெய்வமே உன்னைத் தினமும்
நாடினோர்க் கருள வருவாய்
கருப்பண்ண சுவாமி துரையே!

மாணிக்கம்

பாங்குடன் பள்ளயம் இட்டுப்
பாச்சோறு படைத்தோர் வாழ
ராங்கியப் பதியில் உயர்
மாணிக்கக் கொழுவீற் றிருந்து
ஓங்கிய கையில் அரிவாள்
ஒளிரும் சுக்கு மாந்தடி
தாங்கிடும் கோவே பெரிய
கருப்பண்ண சுவாமி துரையே!

முத்து

சத்தியம் தவறிப் பாரில்
தர்மத்தின் நிலையது மாறி
மத்திடைத் தயிரைப் போல
மனமது கலங்கும் வேளை
வித்தாரக் குதிரை ஏறி
வேகமாய் வந்து காக்கும்
முத்தனே முதல்வா பெரிய
கருப்பண்ண சுவாமி துரையே!

கோமேதகம்

ஏவலும் பில்லி சூனியம்
எவரேனும் செய்த போதும்
காவலாய்க் காக்க வருவாய்
கண்ணனே கோமே தகமே
சேவடி இரண்டின் மீதும்
செவ்விய மலர்கள் தூவிப்
பாவலர் நாளும் பாடும்
கருப்பண்ண சுவாமி துரையே!

பதுமராகம்

சோகமே வாழ்வில் என்றும்
சுமந்தவர் சுகமே காண
வேகமாய்ச் சீறிப் பாயும்
வெண்பரி ஏறும் தெய்வம்
மேகத்தின் கரிய வண்ண
மேனிய னாயினும் பதும
ராகமாய்ச் சொலிக்கும் பெரிய
கருப்பண்ண சுவாமி துரையே!

நீலம்

நீரின்மேல் தூங்கும் போது
நீலநிற மேனி கொள்வாய்
யாருன்னை அழைத்த போதும்
அரிவாளும் தடியும் தாங்கி
கார்வண்ண மேனி கொண்டு
காத்திட வருவாய் இந்தப்
பாரெல்லாம் போற்றும் பெரிய
கருப்பண்ண சுவாமி துரையே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !