உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் கடந்த 7ம் தேதி துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று பத்தாம் நாள் உற்சவமாக பொதுப்பணித்துறை சார்பில் காலை 9:00 மணிக்கு விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நகராட்சித் தலைவர் அருளழகன், கண்காணிப்பு பொறியாளர்கள் ஜெய்சிங், செல்வராஜ், செயற்பொறியாளர் பெரியசாமி உள்ளிட்டோர் பெண் வீட்டார் சார்பில் ஊர்வலமாக சீர் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். சுமங்கலி பெண்கள் 2,000 பேருக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். பிற்பகல் 2:30 மணியளவில் மணமுக்தாறு மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது. இரவு 10:00 மணிக்கு ஸ்படிக பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக இன்று (17ம் தேதி) அதிகாலை 5:00க்கு மேல் 6:30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாப்பிள்ளை வீட்டாராக வருவாய்த்துறையினர், பெண் வீட்டாராக பொதுப்பணித்துறையினர் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !