பாடலீஸ்வரர் கோவிலில் பெரிய நாயகி அம்மனுக்கு ஆடிப்பூர அபிஷேகம்!
ADDED :3801 days ago
கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு ஆடிப்பூர சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னதியில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 7ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி மாட வீதியுலா நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கொலு மண்டபத்தில் உற்சவர் அம்மன் எழுந்தருளினார். குழந்தை பாக்கியம், திருமணம் வேண்டி பக்தர்கள் அளித்த வளையல், மஞ்சள், குங்குமம், தாலி சரடு வைத்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர், தீபாராதனை நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி, கோவில் செயலர் அலுவலர் ரத்தினாம்பாள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.