வடமதுரை அருகே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு: வினோத நேர்த்திக்கடன்!
வடமதுரை: வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி பெற்று வினோதமாக நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். வடமதுரை அருகே கே.குரும்பபட்டியில் யோக விநாயகர், அகோர வீரபுத்திரன், கருகாளியம்மன், ராவணேஸ்வரன், கெப்பாயி, முனியப்பன், கருப்பணசுவாமி கோயில்கள் உள்ளன. இங்கு நேற்றுமுன்தினம் 3 நாள்ஆடிஉற்சவ திருவிழா துவங்கியது. நேற்று 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் விரதத்துடன் கோயில் முன்பாக அமர்ந்திருந்தனர். பூஜாரி பழனிச்சாமி கோயிலில் வழிபாடு முடித்து, பின்னர் வரிசையாக பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். பின்பு பக்தர்கள் பூஜாரி சரவணனிடம், ஒரு சாட்டையடி பெற்ற பின்னர் கோயிலுக்குள் சென்று வழிப்பட்டனர். பல்வேறு வேண்டுதல்,நேர்த்திகடன் செலுத்துவதற்காக பக்தர்களின் இந்தவினோத வழிபாட்டை காண சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.