உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொதிக்கும் எண்ணையில் கை விட்டு சுட்ட வடை: ரூ.31 ஆயிரத்துக்கு ஏலம்!

கொதிக்கும் எண்ணையில் கை விட்டு சுட்ட வடை: ரூ.31 ஆயிரத்துக்கு ஏலம்!

திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே, ஆதிபராசக்தி அம்மன் கோவில் விழாவில், கொதிக்கும் எண்ணையில், பக்தர் கையாடல் சுட்ட வடை, 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஆடிப்பூரம் விழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, யாக பூஜை, 108 பால்குடம் அபிஷேகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அந்தரத்தில் கயிற்றில் தொங்கியபடி வந்து, பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவித்தனர். அதன்பின், பக்தர் ஒருவர், தன் மார்பில் உரலை வைத்து, அதில் மற்றவர்கள் மஞ்சள் போட்டு இடித்தனர். அதை தொடர்ந்து, கொதிக்கும் எண்ணையில் கையை விட்டு, பக்தர் ஒருவர் கையால், ஏழு வடைகள் சுடப்பட்டது. இந்த வடைகளை, குழந்தையில்லாத பெண்கள் சாப்பிட்டால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், ஏழு வடைகளும் ஏலம் விடப்பட்டது. பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். ஏழு வடைகளும், 31 ஆயிரத்து, 80 ரூபாய்க்கு ஏலம் போனது. அதிகபட்சமாக ஒரு வடை, 9,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல், பக்தர் மார்பில் உரலை வைத்து இடித்த மஞ்சளை, திருமணமாகாத இளம்பெண்கள் பிரசாதமாக வாங்கி சென்றனர். தொடர்ந்து, இரவில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !