உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரா புறப்படுதல்

மதுரா புறப்படுதல்

1. நிசமய்ய தவ அத யாந வார்த்தாம்
ப்ருசம் ஆர்த்தா: பசுபால பாலிகா: தா:
கிம் இதம் கிம் இதம் கதம் நு இதி இமா:
ஸமவேதா: பரிதேவிதாநி அகுர்வந்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ மதுரா நகரத்திற்குச் செல்லப் போவதை கோபிகைகள் அறிந்தனர். அவர்கள் மிகவும் வருத்தம் கொண்டனர். அனைவரும், இது எப்படி நடந்தது? ஏன் இப்படி நடந்தது? என்று புலம்பினர்.

2. கருணா நிதி: ஏஷ: நந்த ஸுநு:
கதம் அஸ்மாந் விஸ்ருஜேத் அநந்ய நாதா:
பத ந: கிமு தைவம் ஏவம் ஆஸீத்
இதி தா: த்வதம் கத மாநஸா விலேபு:

பொருள்: குருவாயூரப்பா! உன்னிடம் இத்தனை நாட்கள் தங்கள் மனதை பறிகொடுத்திருந்த அந்த கோபிகைகள், நந்தகோபரின் இந்த மகன் மிகவும் கருணை உள்ளவன் ஆயிற்றே! நமக்கு அவனைத் தவிரக் காப்பாற்றும் தெய்வம் வேறு எதுவும் இல்லையே? அவன் எப்படி நம்மைக் கை நழுவ இயலும்? நமது விதி என்று கூற வேண்டும் என்று பலவாகப் புலம்பினார்.

3. சரம ப்ரஹரே ப்ரதிஷ்டமாந:
ஸஹ பித்ரா நிஜ மித்ரா மண்டலை: ச
ப்ரதிதாப பரம் நிதம்பி நீநாம்
சமயிஷ்டயந் வ்யமுச: ஸகாயம் ஏகம்

பொருள்: குருவாயூரப்பா! நீ அன்று இரவு கடைசி ஜாமத்தில் உனது தந்தையுடனும் நண்பர்களுடனும் புறப்படத் தயாரானாய். அந்த நேரம் உன்னையே நினைத்து வருந்திய கோபிகைகளின் துயரத்தை நீக்க விரும்பினாய். அவர்களிடம் உனது தோழன் ஒருவனை அனுப்பினாய் அல்லவா?

4. அசிராத் உபயாமி ஸந்நிதம் வோ
பவிதா ஸாது மயா ஏவ ஸங்கம ஸ்ரீ:
அம்ருதா அம்புநிதௌ நிமஜ்ஜயிஷ்யே
த்ருதம் இதி ஆச்வஸிதா: வதூ: அகார்ஷீ:

பொருள்: குருவாயூரப்பா! நீ அந்த கோபிகைகளிடம் (உனது நண்பன் மூலமாக), நான் வெகு சீக்கிரமாகத் திரும்பி வருவேன். அப்போது என்னுடைன் கூடி நிற்கும் உயர்ந்த செல்வங்களும் இன்பமும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களை அந்த இன்பத்தில் நான் விரைவில் வந்து ஆழ்த்துகிறேன் என்று ஆறுதலாகக் கூறினாய்.

5. ஸவிஷாத பரம் ஸயாஞ்சம் உச்சை:
அதிதூரம் வநிதாபி: ஈக்ஷ்யமாண:
ம்ருது தத் திசி பாதயந் அபாங்காந்
ஸபல: அக்ரூர ரதேந நிர்கத: அபூ:

பொருள்: அந்த கோபிகைகள் நெஞ்சம் கனத்தது. அப்படிப்பட்ட கனமான இதயத்துடன் உன்னிடம், க்ருஷ்ணா! நீ சீக்கிரமாக திரும்பி வந்துவிட வேண்டும், சரியா? என்று கூறினர். தங்கள் தலையை நிமிர்த்தி நிமிர்த்தி உன்னைப் பார்த்தனர். நீயும் அவர்கள் இருந்த திசையில் உனது கடைக்கண் பார்வையைச் செலுத்தினாய். பின்னர் பலராமனுடன் அக்ரூரரின் தேரில் ஏறிப் புறப்பட்டாய்.

6. அநஸா பஹுலேந வல்லவாநாம்
மநஸா ச அநுகத: அத வல்லபாநாம்
வநம் ஆர்த்த ம்ருகம் விஷண்ண வ்ருக்ஷம்
ஸமதீத: யமுநா தடீம் அயாஸீ:

பொருள்: குருவாயூரப்பா! நீ செல்லும்போது உன் பின்னால் பல ஆயர்களின் வண்டிகளும், கோபிகைகளின் இனிமையான மனங்களும் பின்பற்றின. உன்னுடைய இந்த பிரிவு தாங்காமல் ப்ருந்தாவனத்தில் இருந்த விலங்குகளும், மரங்களும் கலங்கின. இவற்றைக் கடந்து யமுனை நதியின் கரையை அடைந்தாய்.

7. நியமாய நிமஜ்ய வாரிணி த்வாம்
அபிவீக்ஷ்ய அத ரதே அபி காந்திநேய:
விவச: அஜநி கிம் நு இதம் விபோ: தே
நநு சித்ரம் து அவலோகநம் ஸமந்தாத்

பொருள்: குருவாயூரப்பா! அப்போது தனது கடன்களை கழிப்பதற்காக அக்ரூரா யமுனை நதியில் மூழ்கினார். அந்த நதியின் உள்ளே உன்னைக் கண்டார். மிகுந்த வியப்புடன் வெளியே வந்தார். நீ தேரிலும் நிற்பதைக் கண்டார். எங்கும் நிறைந்து உள்ள நீ இப்படிக் காட்சி அளிப்பது வியப்பு அல்ல.

8. புந: ஏஷ: நிமஜ்ஜய புண்யசாலீ
புருஷம் த்வாம் பரமம் புஜங்க போகே
அரி கம்பு கதா அம்புஜை: ஸ்புரந்தம்
ஸுர ஸித்த ஓக பரீதம் ஆலுலோகே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! புண்ணியம் செய்தவரான அக்ரூரர் மீண்டும் நீரில் மூழ்கினார். அப்போது உன்னை சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை உடைய நான்கு கரங்களுடனும், தேவர்கள் கூட்டம் சூழ நின்றவனாகவும், ஸ்ரீமந் நாராயணனாக (பரம புருஷனாக) ஆதிசேஷன் மீது உள்ளவனாகக் கண்டாராமே!

9 ஸததா பரமாத்ம ஸௌக்ய ஸிந்தௌ
விநிமக்ந: ப்ரணுவந் ப்ரகார பேதை:
அவிலோக்ய புந: ச ஹர்ஷ ஸிந்தோ
அநுவ்ருத்யா புலக ஆவ்ருத: யயௌ த்வாம்

பொருள்: குருவாயூரப்பா! இதனைக் கண்ட அக்ரூரர் பேரானந்தக் கடலில் மூழ்கினார். உன்னைப் பலவாகத் துதித்தார். உனது இப்படிப்பட்ட தரிசனம் மறைந்த பிறகும் அவரது ஆனந்தம் நிலைத்து நின்றது. அந்த ஆனந்தத்துடனே மயிர் கூச்சல் எடுத்தவராக உன்னிடம் வந்தார் அல்லவா?

10. கிமு சீதளிமா மஹாந் ஜலே யத்
புலக: அஸௌ இதி சோதிதேந தேந
அதிஹர்ஷ நிருத்தரேண ஸார்த்தம்
ரதவாஸீ பவந ஈச பாஹி மாம் த்வம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஈசனே நீ அவரை நோக்கி, என்ன ஆக்ரூரரே! யமுனையின் நீர் மிகவும் குளிர்ந்து இருந்ததா என்ன? உங்கள் உடல் முழுவதும் மயிர்க்கூச்சல் காணப்படுகிறதே என்று அன்புடன் கேட்டாய். அவர் மகிழ்வின் காரணமாக வார்த்தைகள் கூறாமல் நின்றார். நீ அவருடன் தேரில் அமர்ந்தாய். குருவாயூரப்பா! என்னை நீயே காப்பாற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !