திருப்பூர் சத்ய சாயி சேவா சார்பில் 90 ஜோடிகளுக்கு திருமணம்!
திருப்பூர்: பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபா, 90வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், 90 ஜோடிகளுக்கு தெய்வீக திருமணம் இன்று நடத்தி வைக்கப்படுகிறது. வாலிபாளையம் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், இன்று காலை, 5 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனம், சாய் பஜன் நிகழ்ச்சிகளுடன், மணவிழா துவங்குகிறது. வேத மந்திரங்கள் ஒலிக்க, காலை, 9 முதல், 10 மணிக்குள், திருமண நிகழ்ச்சி நடக்கிறது. மண மக்களுக்கு இரண்டு கிராம் தாலி, வெள்ளி மெட்டி வழங்கப்படுகிறது. மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி, நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. மண்டபம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, மணமக்கள் அழைத்து வரப்பட்டனர். சத்ய சாயி சேவா அறக்கட்டளை சார்பில், மணமக்களுக்கு, 27 வகையான பொருட்களுடன் கூடிய சீர்வரிசை, கோவை ‘சாய் நிதா பவுண்டேஷன்’ சார்பில், திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. சத்ய சாயி சேவா நிறுவன மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் கூறுகையில், “தெய்வீக திருமண நிகழ்ச்சியில், ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவன அகில இந்திய உப தலைவர் ரமணி, மாநில தலைவர் வரதன், உப தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், சாயி பக்தர்கள் பங்கேற்கின்றனர்,” என்றார்.