சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
குமாரபாளையம்: சக்தி விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். குமாரபாளையம் அடுத்த தட்டாங்குட்டையில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து பஞ்ச கவ்யம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகபூஜை, புண்யாகம், விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதியும் நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில், தட்டாங்குட்டை பஞ்சாயத்து தலைவர், பி.ஏ.சி.பி., தலைவர் தேவராஜன், முன்னாள் தலைவர் காந்தி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.