உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் கருவறை தகடுகள் அகற்றம்

கோட்டை மாரியம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் கருவறை தகடுகள் அகற்றம்

சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில், உள், வெளிப்பிரகார பணிகள் மேற் கொள்ளப்படுவதால், கருவறையில் மாற்றம் செய்வது குறித்து, தொல்பொருள் ஆய்வுத்துறையின் அறிக்கையை பெறுவதற்காக, நேற்று போலீஸ் பாதுகாப்புடன், கருவறையின் வெளிப்பகுதியில் உள்ள தகடுகள் அகற்றப்பட்டது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் வெளிப்பிரகாரம், 90.87 லட்சம் ரூபாயிலும், உள்பிரகாரத்தை, 80 லட்சம் ரூபாயிலும் திருப்பணி மேற் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி துவங்கிய நிலையில், ஆடிப் பண்டிகை நெருங்கியதால், பணிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. பண்டிகை முடிந்து விட்ட நிலையில், மீண்டும் கோட்டை மாரியம்மன் கோவிலின் திருப்பணிகளை துவக்கும் வகையில், கோவில் நிர்வாகம் தொல் பொருள் துறையின் ஆய்வு அறிக்கையை எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் கோவிலில் ஆய்வு மேற் கொண்டு தொல்பொருள் துறை அதிகாரிகள், கருவறையில் உள்ள செப்பு, தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை அகற்றி அதில் வீடியோ ஆதாரங்கள், தகட்டில் குறிப்பிட்ட பகுதியை அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொண்டனர். தொல்பொருள் துறையின் வேண்டுகோளை ஏற்று, நேற்று காலையில் கருவறையின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள செப்பு, தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை அகற்றும் பணி துவங்கியது. சேலம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமு, கோவில் நிர்வாக அலுவலர் உமாதேவி ஆகியோர் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கருவறையை சுற்றி பதிக்கப்பட்டு இருந்த செப்பு, தங்க முலாம் தகடுகள் அகற்றப்பட்டன. இது குறித்து, வீடியோ காட்சிகள், படங்கள் எடுக்கப்பட்டு, தொல்பொருள் துறைக்கு அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். தொல் பொருள் துறை அதிகாரிகள் அளிக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்த கட்ட பணி துவங்கும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிர்வாக அதிகாரி உமாதேவி கூறியதாவது:
கோவிலின் கருவறையில் எவ்வித மாற்றம் செய்யப்படுவது இல்லை. அதே நேரத்தில், தொல்பொருள் துறையினர் கேட்டுக் கொண்டபடி செப்பு தகடு அகற்றப்பட்டுள்ளது. இந்த தகடு குறித்த எவ்வித ஆவணமும் கோவில் நிர்வாகத்திடம் இல்லை. இதனால், மீண்டும் தகடு பதிக்கப்படுமா என்பதை துறைதான் முடிவு செய்யும். தொல்பொருள் துறையின் ஆய்வு அறிக்கைக்கு பின், திருப்பணி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !