உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவ, வைணவ வழிபாட்டு நடுகல் பென்னாகரம் அருகே கண்டுபிடிப்பு!

சைவ, வைணவ வழிபாட்டு நடுகல் பென்னாகரம் அருகே கண்டுபிடிப்பு!

சென்னை: தர்மபுரி மாவட்டத்தில், சைவ, வைணவ வழிபாட்டை வலியுறுத்தும், நடுகற்கள் இதுவரை தென்படவில்லை. ஆனால், இரு சமய வழிபாட்டை குறிக்கும், நடுகல் ஒன்று, தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் வட்டம், தாசம்பட்டி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில், இந்த நடுகல் உள்ளது. நடுகல்லில், பல்வகை சிற்பங்களுடன், சிவலிங்கம், சங்கு, சக்கரம் போன்றவை உள்ளன. தர்மபுரி அரசு கலை கல்லுாரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:இந்த நடுகல் தாசம்பட்டியில் இருந்து, 4 கி.மீ., தொலைவில், வனப்பகுதியில், உள்ளது. சேலம் மாவட்டம், கொளத்துார் பகுதியில் உள்ள குறுமனுார் மக்கள், இந்த நடுகல்லை குலதெய்வமாக வணங்குகின்றனர். நடுகல்லில், பெண் ஒருவர், தலை மீது குவளையை வைத்தபடி நிற்கிறார். அருகில், வீரன் ஒருவன் எதிரியின் குதிரையை வாளால் குத்தி போரிடுகிறான்.

நடுகல்லின் மேல்பகுதியில் சிவலிங்கம் உள்ளது; மேலும், அரசன் சொர்க்கத்தில் உள்ளது போன்ற உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வைணவ வழிபாட்டு சின்னங்களான, சங்கு, சக்கரமும் உள்ளது. குறுமன் பழங்குடியினர், குறிப்பிட்ட காலம் வரை, மூதாதையர்களை மட்டுமே வழிபட்டனர். பின், சமதள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த போது, அங்குள்ள மக்களின் கலாசாரங்களுக்கு மாறத் தொடங்கினர். அப்போது, சிவ, வைணவ வழிபாட்டை மேற்கொண்டுள்ளனர். இந்த நடுகல், 15-ம் நுாற்றாண்டின் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என, தொல்லியல் துறையினர் கூறுகின்றனர். பெண்ணின் தலையில் உள்ள கொண்டை, வேட்டி அணியும் முறை போன்றவற்றின் மூலம், இதை உறுதி செய்துள்ளனர். சிவ, வைணவ வழிபாட்டை இணைந்து வலியுறுத்தும் வகையில், தர்மபுரி மாவட்டத்தில் அறியப்பட்ட முதல் நடுகல் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !