இதிகாசம் புராணம் வெறும் கட்டுக்கதை அல்ல!
சென்னை: இதிகாசம், புராணம் வெறும் கட்டுக்கதை அல்ல; அதுகுறித்த அறிவியல் ரீதியான ஆராய்ச்சி மூலம், உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என, தொல்லியலாளர் ராஜன் தெரிவித்தார்.
கண்ணன் வாழ்ந்தது எப்போது?: கோகுலாஷ்டமியை முன்னிட்டு, ராஜனின் கண்ணனை தேடி தொல்லியல் பயணம் என்ற தலைப்பிலான கண்காட்சி, ஆழ்வார்பேட்டை, சி.பி.ஆர்ட் அரங்கில், நேற்று துவங்கியது. அதில், தொல்லியலாளர் டி.கே.பி.ராஜன் கூறியதாவது: கண்ணபிரான் 3,350 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக, ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 ஆண்டுகளில் கண்ணபிரான் குறித்த ஆராய்ச்சிகள் குறைவுதான். துவாரகா கடலில் மூழ்கியது என, எஸ்.ஆர்.ராவ் கண்டறிந்த தகவல் பழமையானது. ஆப்கானிஸ்தானில் கண்ணன் உருவம் பொறித்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. மகாவீரர் அலெக்சாண்டரை எதிர்த்து போரிட்ட, போரஸ் என்ற புருஷோத்தமன் யாவர்தான், போருக்கு பின், பல்லாயிரக்கணக்கான கிரேக்கர்கள், கண்ணனின் பக்தர்களாக மாறியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்போது, அவரின் கல்வெட்டுகளை கண்டுபிடித்து வருகின்றனர்.
ஆப்கனில் ராமன் நாணயம்: நம் இதிகாசங்கள், புராணங்கள் வெறும் கட்டுக்கதை அல்ல; விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு, மத்திய, மாநில அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வரும் 5ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்ட கண்ணன், பலராமன் உருவங்கள் பொறித்த நாணயங்கள், மத்திய பிரதேசத்தில் 2,200 ஆண்டுகள் முன் கண்ணன் பக்தனாக மாறிய கிரேக்கனின் துாண், கம்பட் வளைகுடாவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள், மதுராவில் கிடைத்த தொல் பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் குறித்த விளக்க படங்கள் இடம்பெற்று உள்ளன.