இஸ்கான் சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி
சேலம்: சேலம், ஜவஹர் மில் திடலில், இஸ்கான் சார்பில், நாளை கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. சேலம் இஸ்கான் சார்பில், நடப்பு ஆண்டில், செப்டம்பர், 5ம் தேதி ஜென்மாஷ்டமி விழா நடத்தப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மூன்று ரோடு அருகில் உள்ள ஜவஹர் மில் மைதானத்தில், விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பளவில், தண்ணீர் புகாத வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு ஏக்கர் பரப்பளவில், வாகனங்கள் நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர், 5ம் தேதி காலை, 8 மணிக்கு துவங்கும் இவ்விழாவில், மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? நான் யார்? கடவுள் யார்? இயற்கையின் சட்டம், யுக தர்மம், உச்ச படைப்பாளர், உச்ச கட்டுப்பாட்டாளர் மற்றும் உச்ச அனுபவிப்பாளர் என்னும் தலைப்புகளில் உபன்யாசங்கள் நடைபெற உள்ளது. மேலும் ஸ்ரீ கிருஷ்ண பலராமரின் விக்கிரகங்களுக்கு, சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு, ஆரத்தி மற்றும் கீர்த்தனம் தொடர்ந்து நடைபெற உள்ளது. குருகுல மாணவர்களின் மந்திர உச்சாடனங்களும் நடைபெறும். இரவு, 10.30 மணிக்கு மஹா அபிஷேகமும், மஹா ஆரத்தியும் கிருஷ்ண பலராமருக்கு நடைபெறும். நாள் முழுவதும் வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட உள்ளன. இங்கு, ஆன்மிக புத்தக ஸ்டால், பிரசாத ஸ்டால், கோவில் கட்டுமான பணி ஸ்டால், கேள்வி பதில் ஸ்டால் ஆகியவை இடம்பெற உள்ளது. செப்டம்பர், 6ம் தேதி இஸ்கானின் ஸ்தாபாக ஆச்சாரியார் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் தோன்றிய நாள் என்பதால், காலை, 10.30 மணிக்கு ஸ்ரீ வியாச பூஜை நடைபெறும். கருப்பூரில் கோவில் திருப்பணி நடைபெறுவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனமோ, நிகழ்ச்சிகளோ இருக்காது என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.