விநாயகர் சதுர்த்தி விழா 2,000 போலீசார் பாதுகாப்பு
கோவை : விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் நேற்று நடந்தது; பாதுகாப்பு பணியில், 2,000 போலீசாரை ஈடுபடுத்துவது என, முடிவெடுக்கப்பட்டது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும், 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து அமைப்புகள் சார்பில், பல்வேறு இடங்களில், 350 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்,போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தலைமையில் நேற்று நடந்தது. போலீஸ் துணை கமிஷனர்கள் ரம்யா பாரதி, ராஜசேகரன், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.ஆலோசனை கூட்டத்தில், விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்; பகல் நேரத்திலேயே விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்தி முடிக்க வேண்டும்; சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் தகுந்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்; ரசாயன கலவைகளால் செய்யப்பட்ட சிலைகள் பயன்படுத்த கூடாது; பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்காமலும், மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழா இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசாரை ஈடுபடுத்துவது எனவும், முடிவெடுக்கப்பட்டது.