கங்கையம்மனுக்கு ஜாத்திரை
ஆர்.கே.பேட்டை: அம்மன் ஜாத்திரை திருவிழா, கிராம எல்லையில் பொங்கல் பூஜையுடன், நேற்று மாலை துவங்கியது. பூங்கரகம்: ஆவணி மாதத்தில், கங்கையம்மனுக்கு ஜாத்திரை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதற்காக, நேற்று மாலை, கிராம எல்லையில், பொங்கல் பூஜை நடத்தப்பட்டது. பூங்கரகம், இன்றும் நாளையும், காலை முதல் மாலை வரை, கிராமத்தை சுற்றி வரும். நேற்று மாலை, ஆர்.கே.பேட்டை வடக்கு எல்லையில், பொங்கல் வைத்து பூஜை நடத்தப்பட்டது. அம்மனுக்காக, மூன்று நாட்கள் விரதம் மேற்கொள்பவர்கள், நேற்று மாலை, பொன்னியம்மன் கோவிலில், விளக்கு ஏற்றி தங்களின் விரதத்தை துவக்கினர். நாளை இரவு, 10:00 மணியளவில், ஆர்.கே.பேட்டை பஜார் வீதியின் முச்சந்தியில் அமைக்கப்படும் வேப்பிலை குடிலில், கங்கையம்மன் எழுந்தருளுகிறார்.
ஊர்வலம்: விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், வேப்பிலை ஆடை அணிந்து, கும்பம் மற்றும் மா விளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு கும்பம் படைக்க உள்ளனர். இதேபோல், அம்மையார்குப்பம், வங்கனுார் உள்ளிட்ட கிராமங்களிலும் நேற்று, ஜாத்திரை திருவிழா துவங்கியது.