உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழிப்பறைக்காக தோண்டிய பள்ளத்தில் மூன்று சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

கழிப்பறைக்காக தோண்டிய பள்ளத்தில் மூன்று சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

சென்னை: திருவண்ணாமலை அருகே, கழிப்பறை கட்ட பள்ளம் தோண்டிய போது, மூன்று சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், அணியாலை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்; இவரது வீட்டின் பின்புறம், கழிப்பறை கட்டுவதற்காக, நேற்று முன்தினம் பொக்லைன்  மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. மூன்று அடி ஆழத்திற்கு தோண்டிய போது, அடியில் பெரிய கற்கள் இருப்பது போல தெரியவந்தது. அதனால், தோண்டும் பணி மெதுவாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 3½ அடி பள்ளத்தில், ஒன்றன் பின் ஒன்றாக, மூன்று சுவாமி சிலைகள் கிடைத்தன. மூன்று சிலைகளில் ஒன்று, 2.5 அடி உயர பெருமாள் சிலை மற்றவை தலா, 2 அடி உயரமுள்ள ராதா, ருக்மணி சிலைகள். இதுபற்றிய தகவல் அறிந்ததும், கலசபாக்கம் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின், சிலைகளை வருவாய் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, தெரிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், தங்கள் ஊரிலேயே கோவில் ஒன்றை கட்டி, அதில் சிலைகளை நிறுவப்போவதாகவும், அவற்றை கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, போலீசார் பாதுகாப்புடன் சிலைகளை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !