தான்தோன்றீஸ்வரர் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்
வாழப்பாடி: பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. வாழப்பாடி அடுத்த, பேளூர் வசிஷ்டநதிக்கரையில், பிரசித்திபெற்ற பஞ்ச பூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமையான அக்கோவிலில், நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூத சிவலிங்கங்கள், தோஷம் நீக்கும் கல்யாண விநாயகர், தாலி பாக்கியம் தரும் வன்னிமரம் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன. கோவில் தேரோட்டம் நேற்று காலை, 10.30 மணியளவில் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான திருத்தேர், கோவில் வளாகத்தில் இருந்து மேள வாத்தியம் முழங்க, வழக்கமான வீதி வழியாக வந்தது. பேளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். தேரோட்டம் நடத்துவதற்காக தேரோட்டப்பாதையில் இருந்த மின் கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டது. அதனால், நேற்று பகல் முழுவதும் பேளூரில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி, ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் தீயணைப்பு வாகனம் ஆகியவைகளும், திருத்தேரை தொடர்ந்து இயக்கப்பட்டன.
* பேளூர் தான்தோன்றீஸ்வர் கோவில் விழாவில் சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் வழிவழியாக பங்கெடுத்து வருகின்றனர். நேற்று காலை அந்த கிராமத்தில் இருந்து வழக்கப்படி ஸ்வாமிக்கு பூஜை தட்டு கொண்டு வருவதற்கு தாமதமானது. எனவே, நல்ல நேரத்தில் தேரோட்டத்தை துவக்குவதற்காக, நேற்று காலை, 10.30 மணிக்கு, சிறிது தூரம் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கிராம மக்கள் பூஜைதட்டு வருகைக்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் தேரோட்டம் துவக்கப்பட்டது. அதனால் சலசலப்பு ஏற்பட்டது.