உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊரெல்லாம் வேப்பிலை வாசம் மணக்குது குங்குமம், மஞ்சள்!

ஊரெல்லாம் வேப்பிலை வாசம் மணக்குது குங்குமம், மஞ்சள்!

ஆர்.கே.பேட்டை: ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, ஆர்.கே.பேட்டை மற்றும்  சுற்றுப்பகுதியைச் சேர்ந்த கிராமங்கள், வேப்பிலை தோரணங்களால்  அலங்கரிக்கப்பட்டுள்ளன.  அம்மன் கோவில்களில் நாள் முழுவதும் நடக்கும் சிறப்பு பூஜையால், குங்குமம், மஞ்சள் வாசம் வீசுகிறது. ஆவணி  மாதம் செவ்வாய்க்கிழமை கங்கையம்மனுக்கு ஜாத்திரை நடத்தப்படுவது வழக்கம், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனுார்,  செல்லாத்துார், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஜாத்திரை திருவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்லை பொங்கலு டன் துவங்கியது. ஆர்.கே.பேட்டை பஜார் வீதியில், நேற்று, வேப்பிலை குடிலில் எழுந்தருளிய கங்கையம்மனுக்கு, பக்தர்கள் வேப்பிலை ஆடை  அணிந்து ஊர்வலமாக வந்து கும்பம் செலுத்தினர். வங்கனுார் செவிண்டியம்மன், அம்மையார்குப்பம் பொன்னியம்மன் மற்றும் காமாட்சியம்மன்  கோவிலில், நேற்று முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருவிழாவை ஒட்டி, வங்கனுார் செவிண்டியம்மன், குத்து காலிட்டு, திருமணக்கோலத்தில் நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் வெள்ளிக்கிழமை, 54 கரங்களுடன் வீதியுலா எழுந்தருளுகிறார். அம்மையார்குப்பத்தில்,  வரும் வெள்ளிக்கிழமை வரை அம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் பூஜைகளால், குங்குமம், மஞ்சள்  வாசம் கமழ்கிறது, வரும் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை,  பொதட்டூர் பேட்டையில் ஜாத்திரை திருவிழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !