கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
ADDED :3714 days ago
ஓட்டேரி: ஓட்டேரி, குயப்பேட்டை கந்தசாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.ஓட்டேரி, குயப்பேட்டையில் கந்தசாமி திருக்கோவில் உள்ளது. கோவில் ராஜகோபுரம், கொடிமரம் சேதம் அடைந்து இருந்தன. இதையடுத்து, கோவில் திருப்பணிகள், கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் துவங்கின. கோவிலின் ராஜகோபுரம், கொடி மரம் ஆகிய திருப்பணிகள் 80 லட்சம் ரூபாய் செலவில் நடந்து முடிந்தன. நேற்று காலை தலைக்காவேரி, ருத்ரகங்கை, கோமுகம், அமர்நாத், மானசரோவர் ஆகிய இடங்களில் இருந்து, புனிதநீர் கொண்டு வரப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடந்தன.நேற்று காலை துவங்கிய கும்பாபிஷேகத்தில், 19 உப சன்னிதிகள் மற்றும் 13 கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி, சிதம்பரம் தீட்சிதர் தலைமையில், 80 சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.