ராமாயணம், மகாபாரதம் கேட்டால் சகல தோஷங்களும் விலகும்
அன்னுார்: ராமாயணமும், மகாபாரதமும் கேட்டால், சகல தோஷங்களும் விலகும் என, அன்னுாரில் மகாபாரத தொடர் சொற்பொழிவில் திருச்சி கல்யாண ராமன் பேசினார். அன்னுார், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மகாபாரத தொடர் சொற்பொழிவு செப்., 7 முதல் நடக்கிறது. நேற்று நள சரித்திரம் என்னும் தலைப்பில், காஞ்சி காமகோடி பீட வித்வான், திருச்சி கல்யாண ராமன் பேசியதாவது: சனி ஒருவரை பிடித்தால், வழக்கத்தை விட, 10 மடங்கு கூடுதலாக உழைக்க வேண்டும். குருவை வணங்கினால் எந்த கிரகமும் நம்மை பாதிக்காது. ராமாயணமும், மகாபாரதமும் கேட்டால், சகல தோஷங்களும் விலகும். ராமா, கிருஷ்ணா, கோவிந்தா என்று சொன்னால், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளில் குளித்த புண்ணியம் கிடைக்கும்.
நள சரித்திரம் கேட்டால், சனி தோஷம் விலகும். கடன் இல்லாதவரே பெரும் முதலாளி. நாம் சேமிப்பது, தகுதியுள்ளவர்களுக்கு தானம் செய்வதற்காகவே. துர்மார்க்கத்தில் சென்றால், நம்மை நம் மனைவி, மக்கள் மதிக்க மாட்டார்கள். பின்னர். சமுதாயம் மதிக்காது. அதன்பின் நம் மீது நமக்கே மதிப்பு இருக்காது. பிறருக்கு கெடுதல் செய்யாமல் இருப்பதே பெரிய காரியம். தரையில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியம். ஜோதிடம் உண்மை என்றாலும், எதற்கெடுத்தாலும், ஜோதிடம் பார்க்கக்கூடாது. சனியின் பிடியில் உள்ளவர்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலே போதுமானது. இவ்வாறு, திருச்சி கல்யாண ராமன் பேசினார். சொற்பொழிவு தினமும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது. ராமானுஜர் பக்தஜன பேரவையினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.