உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னீஸ்வரர் கோவிலில் விநாயகருக்கு புதிய தேர்

மன்னீஸ்வரர் கோவிலில் விநாயகருக்கு புதிய தேர்

அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், புதிதாக விநாயகருக்கு, 10 லட்சம் ரூபாயில் தேர் செய்யப்பட்டுள்ளது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. இங்கு சிவன் மேற்கு நோக்கி வீற்றிருப்பதால், மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரருக்கு கடந்த, 2000ம் ஆண்டில் புதிய தேர் செய்யப்பட்டு, 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம் தேரோட்டம் நடக்கிறது. தேருக்கு முன் செல்லும் விநாயகர், சப்பரத்தில் வைத்து அழைத்து செல்லப்படுகிறார். இதையடுத்து, விநாயகருக்கு என புதிய தேர் செய்யும் பணி ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது.

தேருக்கு தலா நான்கு அடி விட்டமுள்ள, நான்கு இரும்பு சக்கரங்களும், இரண்டு இரும்பு அச்சுக்களும் இடிகரையில் செய்யப்பட்டன. தேர், 7.75 அடி உயரமும், 7.75 அடி அகலமும் உடையதாக, வாகை மற்றும் இலுப்ப மரத்தில் செய்யப்படுகிறது. சக்கரமும், அச்சும் 1.50 டன் எடை கொண்டதாக உள்ளன. தேர், 4.50 டன் எடையுள்ளதாக செய்யப்படுகிறது. தேரின் மேல்பகுதி அலங்காரத்திற்கு பின் தேர், 21 அடி உயரம் கொண்டதாக இருக்கும். தேரின் முன்பகுதியில் இருகுதிரைகளும், பிரம்மாவும் அமைக்கப்பட்டுள்ளன. தேரின் வெளிப்பகுதியில், விநாயகர், சிவன், சரஸ்வதி, பார்வதி உள்ளிட்ட வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சேலம், தம்மம்பட்டி, சிற்பி சக்திவேலன் தலைமையில் தேர் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். பணி முடியும் நிலையில் உள்ளது. தேர் வெள்ளோட்டம் வரும், 17ம் தேதி காலை 11:00 மணிக்கு துவங்கி, தேரோடும் வீதியில் நடக்கிறது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை திருமுருகன் அருள்நெறிக் கழகத்தினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !