காளி கோவிலில் நிர்வாண பூஜை!
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே, காளி கோவிலில், நள்ளிரவில் நிர்வாண பூஜை நடத்திய கும்பல், பூசாரியை கண்டதும் தப்பியோடியது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த, அருங்குரிக்கை புதுாரில் பழமையான காளி கோவில் உள்ளது. இங்கு, மின் விளக்கு பயன்படுத்துவதில்லை. கோவில் பூசாரியாக, கண்ணையன், 48, என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, கண்ணையன், அவரது மனைவி அமிர்தம் ஆகியோர், கோவில் மண்டபத்தில் துாங்கினர். நள்ளிரவு, 12:00 மணிக்கு, கோழி கத்தும் சத்தம் கேட்டது. அமிர்தம் எழுந்து பார்த்தபோது, கோவில் வாசலில், சூலத்தின் அருகில் யந்திரம் வரைந்து, ஆறு ஆண்கள் நிர்வாணமாக அமர்ந்து, கோழியின் தலை மட்டும் வெளியில் தெரியுமாறு, மண்ணில் புதைத்து, பூஜை செய்து கொண்டிருந்தனர். அதிர்ச்சியடைந்த அமிர்தம், தன் கணவரை எழுப்பினார். இருவரும், பூஜை நடத்தியவர்களிடம் கேட்ட போது, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அந்த கும்பல், அங்கிருந்து தப்பியோடியது; நேற்று காலை, ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக கண்ணையன் அளித்த புகாரை அடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.