54 கரங்களுடன் செவிண்டியம்மன் உலா!
சொரக்காய்பேட்டை: ஒரு வாரமாக, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடந்து வந்த ஜாத்திரை திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டையில் இந்த வாரம் கோலாகலமாக துவங்கியுள்ளது. ஆர்.கே.பேட்டை, செல்லாத்துார், கிருஷ்ணாகுப்பம், ராஜாநகரம், ஸ்ரீகாளிகாபுரம், வங்கனுார், அம்மையார்குப்பம் என, 15க்கும் மேற்பட்ட கிராங்களில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல், வெள்ளிக்கிழமை வரைஜாத்திரை திருவிழா நடந்தது. கங்கையம்மனுக்கு செவ்வாய்க்கிழமை காலை கூழ் வார்த்தலும், இரவு கும்பமும் படைக்கப்பட்டது. தொடர்ந்து, புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினார். வங்கனுார் செவிண்டியம்மன், செவ்வாய் க்கிழமை மணப்பெண் அலங்காரத்திலும், வெள்ளிக்கிழமை 54 கரங்களுடனும், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த ஆண்டு திருவிழாவின்÷ பாது, அம்மையார்குப்பத்தில் கலவரம் ஏற்பட்டதால், சிறப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், வங்கனுார் மற்றும் ஸ்ரீகாளிகாபுரத்தில் பக்தி இன்னிசை கச்சேரி என, திருவிழா கோலாகலமாக நடந்தது. நாளை மறுதினம், புதன்கிழமை பொதட்டூர்பேட்டையிலும், வியாழக்கிழமை சொரக்காய்பேட்டையிலும் அம்மனுக்கு கும்பம் படைக்கப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து அம்மனுக்கு உற்சவம் நடைபெறுகிறது.