மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி, தீர்த்த கலச ஊர்வலம்
திருப்பூர்: ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முளைப்பாரி, தீர்த்த கலச ஊர்வலம் நடந்தது. ஆண்டிபாளையத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது; 16ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை, 5:00 மணிக்கு, மகா கணபதி ஹோமம், கோ பூஜை, அஸ்வ, கஜ பூஜைகள் நடந்தன. ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், குளத்துக்கடை, சின்னியகவுண்டன் பாளையம், குள்ளே கவுண்டன்பாளையம், எஸ்.ஆர்., நகர், தனலட்சுமி நகர், ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா நகர், முல்லை நகர் உள்ளிட்ட பகுதி பெண்கள் முளைப்பாரி இட்டிருந்தனர். சுவாமி மலை, பழமுதிர்சோலை, வெள்ளியங்கிரி மலை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்திருந்தனர். ஒவ்வொரு பகுதியில் இருந்தும், ஊர் பொதுமக்கள், முளைப்பாரி மற்றும் தீர்த்த கலசங்களை, மேளதாளம், வான வேடிக்கை முழங்க நேற்று, ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். மூலவர், அம்பிகை, விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. மாலை, 4:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையுடன், முதற்கால யாக பூஜை துவங்கியது. 16ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு, காலை, 9:15 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.