வெள்ளலுாரில் ஏழை காத்தம்மனாக ஏழு சிறுமிகள் தேர்வு!
மேலுார்: மேலுார் அருகே வெள்ளலுாரில், ஏழை காத்தம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு, அம்மனாக பாவிக்க ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வெள்ளலுார், உறங்கான்பட்டி, அம்பலக்காரன்பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி உட்பட 60 கிராமங்கள் வெள்ளலுார் நாடு என்றழைக்கப்படுகிறது. வெள்ளலுார் ஏழைகாத்தம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில், அம்மனாக பாவிக்க 7 சிறுமிகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோயில் வீட்டு முன் செம்புலி, நண்டன்கோப்பன், பூலன்மலவராயன், மூண்டவாசி, வேங்கைபுலி, சமட்டி, நைக்கான் ஆகிய ஏழு கரைகளை(பிரிவு) சேர்ந்த குழந்தைகளை பூஜாரி சின்னதம்பி, அம்மனாக பாவிக்க தேர்வு செய்து, கோயில் வீட்டிற்குள் அழைத்து சென்றார்.இச்சிறுமிகள் 15 நாட்கள் கோயிலில் தங்கி, 60 கிராமங்களை வலம் வந்து, கிடைக்கும் பொருட்களை கொண்டு சமைத்து சாப்பிடுவர். இந்நாட்களில் மக்கள் எண்ணெய் தாளிதம், மாமிசம், மரம் வெட்டுதல், மாவு பிசைந்து சமைக்காமல் கடும் விரதம் இருப்பர்.
செப்.,22ல் முளைப்பிடுங்கி ஆடுதல் நிகழ்ச்சியும்(பானையில் இருக்கும் நெல் எடுப்பது), செப்.,29ல் கோயில் வீட்டில் இருந்து சிறுமிகள் முன்னே செல்ல, அம்பலக்காரர்கள் தலைமையில் 8 கி.மீ., துாரத்தில் கோயில்பட்டியில் உள்ள ஏழை காத்தம்மன் கோயிலுக்கு நடந்து செல்வர்.இதைதொடர்ந்து, பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியின்றி வாழ உடலில் வைக்கோல் பிரிசுற்றியும், குழந்தை வரம் கேட்டு பதுமைகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். செப்.,30ல் தேரோட்டம், அக்.,1ல் மஞ்சள் நீராட்டு, அக்.,7ல் பெரிய மது குலைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழா பின்னணி: வெள்ளலுார் நாட்டில் முந்தைய காலத்தில் தங்கைக்கு பிறந்த 7 குழந்தைகளை, தன்னுடையதாக கருதி அக்கா வளர்த்து வந்தார். இதனால் பயந்த தங்கை, ஏழு குழந்தைகளை கூடைக்குள் மறைத்து வைத்துவிட்டு, குழந்தைகள் வெளியே விளையாட சென்றதாக அக்காவிடம் கூறினார். அக்கா சென்ற பின் கூடையை திறந்த பார்த்த போது, ஏழு குழந்தைகளும் கல்லாக மாறியிருந்தனர். தான் செய்த தவறை எண்ணி தங்கை வேண்ட, குழந்தைகள் திரும்ப கிடைத்தனர். இந் நிகழ்ச்சியே ஏழை காத்தம்மன் கோயில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.