விநாயகருக்கு 8,000 கிலோ லட்டு: ஆந்திராவில் கின்னஸ் சாதனை!
ஆந்திரா:ஆந்திராவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 8,000 கிலோ எடையுள்ள மெகா லட்டு தயாரித்து, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த, சாலடி வெங்கடேஸ்வர ராவ், கடந்த நான்கு ஆண்டுகளாக, மெகா சைஸ் லட்டுகளை தயாரித்து, கின்னஸ் சாதனை படைத்து வருகிறார். இந்தாண்டு, முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வகையில், 8,000 கிலோ எடையுள்ள லட்டை தயாரித்துள்ளார். இதற்கு, நவ்யாந்திரா லட்டு எனப் பெயரிடப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆதரவுடன், விசாகா சமூக நல அமைப்பு நிர்மாணித்துள்ள, 80 அடி உயர விநாயகர் சிலை முன் படைப்பதற்காக, இந்த மெகா லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த லட்டு, எட்டு மணி நேரம், 12 பேர் உழைப்பில் தயாரானதாக, வெங்கடேஸ்வர ராவ் கூறினார். இதற்கிடையில், ராஜமுந்திரியைச் சேர்ந்த ஒருவர், 6,000 கிலோ எடையுள்ள மெகா லட்டை தயாரித்துள்ளார். இந்த லட்டு, தெலுங்கானா மாநிலம், கைர்தாபாத்தில், 59 அடி உயர விநாயகர் முன் படைக்கப்பட உள்ளது.