உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம்!
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூரில் மட்டுமே நடக்கும் வெயிலுகந்த விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய இருதேவியருடன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா, கடந்த செப்.,8 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் மாலையில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 8 ம் நாளான நேற்றுமாலை 5.10 மணிக்கு சித்தி,புத்தி ஆகிய இருதேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தமிழகத்தில் இந்த கோயிலில் மட்டுமே விநாயகருக்கு திருமணம் நடைபெறுவதால், உப்பூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் கலந்துகொண்டு, மொய் செலுத்தி திருமண விருந்தாக கொழுக்கட்டை பெற்று சென்றனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து விநாயகர், இரு தேவியருடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9 ம் நாளான இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.