வைகையில் 270 விநாயகர் சிலைகளை கரைக்க திட்டம்
மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்.,17 முதல் 19 வரை மொத்தம் 270 சிலைகளை கரைக்க, இந்து அமைப்புகள் முடிவு செய்து, போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளன. செப்.,17 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அன்று மாலை தமிழ்மாநில சிவசேனா கட்சி சார்பில் வடக்குமாசி - மேலமாசிவீதி சந்திப்பில் இருந்து ஊர்வலம் துவங்குகிறது. செப்.,18ல் இந்து மக்கள் கட்சி, அகில பாரத இந்து மகா சபா சார்பில் 60 சிலைகள், கீழமாசி வீதியில் இருந்து புறப்படுகின்றன. செப்.,19ல் இந்து முன்னணி, பா.ஜ., சார்பில் 209 சிலைகள் ஊர்வலம் துவங்குகிறது. கடந்தாண்டு நகரில் 109 சிலைகளுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், கூடுதல் சிலைகள் ஊர்வலத்தில் முன்அனுமதியின்றி கொண்டு வரப்பட்டன. சிலைகள் அனைத்தும் கடந்தாண்டு வரை, சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை தரைப்பாலம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, வைகையாற்றில் கரைக்கப்பட்டது. இந்தாண்டு தரைப்பாலம் இடிக்கப்பட்டதால், அருகில் உள்ள யானைக்கல் தரைப்பாலம் வழியாக சிலைகளை எடுத்துச் சென்று கரைக்கப்படவுள்ளது.