11 விநாயகர் சிலை கொண்ட கோவிலில் சிறப்பு அபிஷேகம்!
திருப்பாச்சூர்: திருவள்ளூர் அருகே, திருப்பாச்சூர் வாசீஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, 11 விநாயகர் சிலைகளுக்கு, நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்துள்ளது பூண்டி ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பாச்சூர் கிராமம். இங்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமான, வாசீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவில், கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோவிலில், 11 விநாயகர் சிலைகள் கொண்ட செல்வ விநாயகர் சபை உள்ளது. தமிழகத்தில் உள்ள, புராதான கோவில்களில் இங்கு மட்டுமே, 11 விநாயகர் சிலைகள் இடம் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். இந்த கோவிலில் நேற்று, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 11:00 மணிக்கு 11 விநாயருக்கு பால், சந்தனம், இளநீர் போன்ற பொருட்களுடன், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பி, 11 விநாயருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை செய்யப்ப்டடது. அதனை தொடர்ந்து மாலை மலர் அலங்காரத்தில், செல்வ விநாயகர், திருவிதீ உலாவும் நடந்தது. மேலும், இந்த கோவிலில், சங்கடஹர சதுர்த்தி அன்று, தலா 11, தேங்காய், வாழைப்பழம், நெய்தீபம் ஏற்றி, அருகம்புல் மாலை அணிவித்து, 11 விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தால், நமது சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், தினமும் காலை 11.00 மணிக்கு நடைபெறும் உச்ச கால பூஜையின் போது, 11 விநாயகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தால், நாம் நினைத்து காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.