சதுர்த்தி விழா கோலாகலம்: கடலுார் மாவட்டத்தில் 1568 சிலைகள் பிரதிஷ்டை!
கடலுார்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலுார் மாவட்டத்தில் 1,568 இடங்களில் விநாயகர் சிலைகளை பொது இடம் மற்றும் கோவில்களில் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடந்தது. கடலுார் பகுதியில் 208 இடங்களிலும், சிதம்பரம் பகுதியில் 255, விருத்தாசலம் பகுதியில் 191, நெய்வேலி பகுதியில் 214, திட்டக்குடியில் 56, பண்ருட்டியில் 455, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் 189 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. வரும் 19ம் தேதி முதல் கடலில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது. லட்டு விநாயகர்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீராம் ஸ்வீட் கடையில் 12 பேர் சேர்ந்து 65 கிலோ எடையுள்ள ‘லட்டு விநாயகர்’ உருவாக்கி கடையில் பொதுக்மக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர்.
புதுப்பாளையம்: இரட்டை பிள்ளையார் கோவிலில் கடந்த 8ம் தேதி முதல், தினமும் மாலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்புறப்பாடு நடந்தது. நேற்று காலை சிறப்பு அபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. கூத்தப்பாக்கம் சக்திநகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நெல்லிக்குப்பம்: கடைவீதி வரசித்தி விநாயகர் கோவில், கீழ்பட்டாம்பாக்கம் விநாயகர் கோவில், வைடப்பாக்கம், காந்தி நகர் உட்பட பல இடங்களில் சிறப்பு பூஜை நடந்தது. சிதம்பரம்: நடராஜர் கோவிலில் உள்ள முக்குறுணி பிள்ளையார், பெரியார் தெரு கூத்தாடும் விநாயகர், கீழவீதி அரசமர விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நகரில் பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
பண்ருட்டி: பண்ரடக்கோட்டை ஸ்ரீசுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மணல் சிற்பத்தில் விநாயகர்:பாலுார் நரிமேடு காந்தி நகரில் அதே பகுதியைச் சேர்ந்த விஷூவல் ஆர்ட்ஸ் படித்த முருகதாஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட மணல் சிற்ப விநாயகருக்கு வழிபாடு செய்தனர். பரங்கிப்பேட்டை: அகரம், அரியகோஷ்டி, பரங்கிப்பேட்டை, கச்சேரித்தெரு, வன்னியர்பாளையம், சலங்குக்குக்கார தெரு, பு.முட்லுார் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுள்ள ஆழத்து விநாயகருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, நார்த்தங்காய், பன்னீர் உள்ளிட்ட பதினோரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். கொளஞ்சியப்பர் கோவில் கொளஞ்சியப்பர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பெண்ணாடம்: அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில், கோடி விநாயகருக்கு சிறப்பு வழிபாடும், சந்தனக்காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தார். கொல்லத்தங்குறிச்சி சாலையில் உள்ள செல்வவிநாயகர் ராஜகணபதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். முக்குளம் பிடாரி செல்லியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள யோக கணபதி சுவாமி, புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். மங்கலம்பேட்டை: ஓட்டைப் பிள்ளையார் என்ற வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.