கோவையில் 1,887 இடங்களில் விநாயகர் சிலை இன்று பிரதி்ஷ்டை!
கோவை:விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கோவையில், 1,887 இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இந்து மக்கள் கட்சி சார்பில், ராஜ வீதி தேர்நிலை திடலில், 16 அடி உயரத்துக்கு பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும், 34 இடங்களிலும், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இந்து முன்னணி சார்பில், தெப்பக்குளம் மைதானத்தில், 14 அடி உயரத்துக்கு சிலை உட்பட, 160 இடங்களில் சிலை பிரதிஷ்டை நடக்கிறது. இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா சார்பில், 36 இடங்களிலும், விஸ்வ இந்து பரிஷத் சார்பில், 27 இடங்களிலும், பாரத்சேனா சார்பில், 24 இடங்களிலும், பா.ஜ., சார்பில், 11 இடங்களிலும், பொதுமக்கள் சார்பில், 36 இடங்களிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
கோவை புறநகரில், இந்து அமைப்புகள் சார்பில், 1,506 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. மாநகரில், 15 போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மொத்தம் 381 சிலைகள் இடம்பெறுகின்றன. இதற்காக, போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்றே விசர்ஜனம் செய்யப்படுகின்றன. கோவை முத்தண்ணன் குளம், சிங்காநல்லுார், வெள்ளக்கிணறு, குறிச்சி குளங்கள்; பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆழியாற்றிலும், விசர்ஜனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 21ம் தேதி மீதமுள்ள, 50 சதவீத சிலைகளை கரைப்பதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். சிலைகள் பிரதிஷ்டையின்போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விசர்ஜனத்துக்கு கோவை குளங்கள் ரெடி:கோவை மாநகரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்காக, போலீசார் மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள குளங்களில் மரத்தடுப்பு அமைத்து, பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்தியுள்ளனர். கோவை நகரில் முத்தண்ணன், குறிச்சி, சிங்காநல்லுார், வெள்ளக்கிணறு குளங்கள் மட்டுமே விசர்ஜனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த குளங்களின் கரைப்பகுதிகளில், சவுக்கு மரங்களை கொண்டு, தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிச்சி குளத்தில், 500 மீ.,க்கு மூங்கில் தடுப்புகளும், முத்தண்ணன் குளக்கரையில், 700 மீ.,க்கு மரத்தடுப்புகளும், வெள்ளக்கிணறு மற்றும் சிங்காநல்லுார் குளக்கரையில், 500 மீ.,க்கு மரத்தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தில் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்கு, வழிமுறைகளையும், தற்காப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று போலீசார் இந்து அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். குளக்கரையிலும், சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதிகளிலும், போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.